புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக' வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று காலை குறிப்பிடத்தக்க மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
