இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு!

 
கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் கொந்தளிப்பு

தென் இந்தியப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் கனமழை பெய்யத் தொடங்கக்கூடும்.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

எல் நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை விலகியதைத் தொடர்ந்து, அடுத்த 2 முதல் 3 நாட்களில் தென் இந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கத் தகுந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 15ம் தேதி கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 16ம் தேதி நீலகிரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

அக்டோபர் 17 & 18ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 5 முதல் 6 நாட்களுக்குத் தென் இந்தியப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.