நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... டிச.4, 5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், அது டிசம்பர் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நாளை உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நகர்ந்து சென்று வரும் டிசம்பர் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 5-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
