நட்புறவில் புதிய மைல்கல்... சீனா – வடகொரியா இடையே புதிய 'யாலு நதி' பாலம் திறப்பு!

 
சீனா – வடகொரியா யாலு நதி பாலம்

கிழக்காசிய நாடுகளான சீனா மற்றும் வடகொரியா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் வரலாற்று ரீதியான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இரு நாடுகளையும் நேரடியாக இணைக்கும் மாபெரும் 'யாலு நதி' புதிய பாலம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கட்டுப்பாடுகள், சரக்குப் போக்குவரத்து மற்றும் பொருளாதாரக் கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பிரம்மாண்ட பாலம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது.

சீனாவின் எல்லையோர வணிக நகரமான டாண்டாங் பகுதியையும், வடகொரியாவின் முக்கிய நகரமான சினுய்ஜு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த 4 வழிச்சாலைப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நவீன உள்கட்டமைப்பு பாலம், இருநாடுகளின் வர்த்தகச் சுழற்சியை அதிகரிக்கும் பெரும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டது.

வடகொரியா

உண்மையில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டே பொதுமக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், வடகொரியத் தரப்பில் பாலம் இணைக்கும் எல்லைப் பகுதி உள்கட்டமைப்புகளை நிறைவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதம், பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச அரசியல் சூழல்கள் காரணமாகப் பாலத்தின் திறப்பு விழா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டு முடங்கிக் கிடந்தது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அனைத்து உள்கட்டமைப்புப் பணிகளும் நிறைவுற்ற நிலையில், பாலம் இன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த புதிய பாலம் திறக்கப்படுவதன் மூலம் சீனா - வடகொரியா இடையே எல்லை தாண்டிய சரக்குப் போக்குவரத்துப் பெருமளவில் விரைவுபடுத்தப்படும்.

சீனா

மேலும், சர்வதேசப் பொருளாதாரத் தடைகளுக்கு நடுவிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் அதிகரிப்பதோடு, கிழக்காசியப் பிராந்தியத்தில் சீன-வடகொரிய ராஜதந்திர உறவுகள் மேலும் பலம்பெற இது பெரும் காரணியாக அமையும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.