இந்தியாவுக்குப் புதிய அச்சுறுத்தல்... ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது 500% வரை வரி விதிப்புச் சட்டத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்!

 
இந்தியா அமெரிக்கா

சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கும் நாடுகள் மீது கடுமையான தடைகளை விதிக்கும் புதிய சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் அந்நாட்டுச் செனட் உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளனர். இந்த சட்ட வரைமுறையால், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அமெரிக்காவின் 500% வரையிலான புதிய இறக்குமதி வரி விதிப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சவாலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வந்த அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன. ஈரானின் அண்மைக்காலத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா பல்வேறு இராணுவ இலக்குகளைக் குறிவைத்துள்ள நிலையில், சர்வதேசப் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில்தான் இந்தியாவுக்கு மற்றொரு பெருஞ்சவாலாக அமெரிக்காவின் இந்த புதிய ரஷ்யா மீதான தடைகள் சட்டம் வேகம் பெற்றுள்ளது.

மோடி ட்ரம்ப்

ரஷ்யா மீதான புதுப்பிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மிக விரைவாக நிறைவேற்றுவது குறித்து, அமெரிக்காவின் இருகட்சி செனட் குழுவினர் டிரம்ப் நிர்வாகத்துடன் நேற்று உடன்பாட்டை எட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் முக்கியச் செனட்டர்களான லிண்ட்சே கிரஹாம் மற்றும் ரோஜர் விக்கர் ஆகியோருடன், ஜனநாயகக் கட்சியின் செனட்டர்களான ரிச்சர்ட் ப்ளூமென்டல் மற்றும் ஜீன் ஷாஹீன் ஆகியோர் இணைந்து இந்த முக்கிய முன்னேற்றத்தை அதிகாரப்பூர்வக் கூட்டறிக்கை மூலம் வெளியிட்டுள்ளனர்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்திற்கு அமெரிக்க செனட் சபையில் பரந்த ஆதரவு கிடைத்துள்ளது. மொத்தம் 84 செனட் உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு இணை ஆதரவாளர்களாக இணைந்து கையெழுத்திட்டுள்ளனர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு உத்தியாக அதிபர் டிரம்ப் இதனைப் பரிசீலித்து வருகிறார்.

2025-2026 காலகட்டத்தின் ரஷ்யா மீதான தடைகள் சட்டத்தின் அசல் வரைவு, ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் மிகக் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது:

இந்த மசோதாவின் அசல் பதிப்பின்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, யுரேனியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கும் நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது அமெரிக்கா 500 சதவீதம் வரை சுங்கவரி விதிக்க முற்படுகிறது. செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டல் இந்த  வரியை "எலும்பை நொறுக்கும் நடவடிக்கை" என்று வர்ணித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நலன்களுக்கு உகந்தது எனக் கருதப்பட்டால், குறிப்பிட்ட நாடுகளுக்கு 180 நாட்கள் வரை இந்த வரியிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கும்  அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்களின்படி இந்தச் சுங்கவரி விதிகள் சற்றே தளர்த்தப்பட்டுத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இறுதி விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.

ட்ரம்ப் மோடி

இந்தச் சட்டத்தின் முக்கிய ஆதரவாளர்களால் இந்தியாவும் சீனாவும் குறிப்பாகக் குறிவைக்கப்பட்டுள்ளன. முன்னதாகச் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சீனா மற்றும் இந்தியாவிற்கு: நீங்கள் புதினின் போர் இயந்திரத்தைத் தொடர்ந்து ஆதரித்தால், உங்களைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல முடியாது" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க-ஈரான் போரைத் தொடர்ந்து, அமெரிக்கத் தடைகளுக்கு உட்படாமல் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதற்கு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பொது உரிமம் கடந்த ஜூன் 17ம் தேதியுடன் முழுமையாகக் காலாவதியானது. இதனால் இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதில் கடுமையான சட்டச் சிக்கல்களும், அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பும் அதிகரித்துள்ளன.