“ஒரு விரல் புரட்சி... மே 4ல் தமிழ்நாடு முழுவதும் விசில் சத்தம் கேட்கட்டும்!” - எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரங்கள் இன்றுடன் ஓயும் நிலையில், தனது மகன் விஜய்யின் அரசியல் வெற்றிக்காகத் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 'X' தளத்தில் ஒரு உணர்ச்சிகரமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
"தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் மிகப்பெரிய மாற்றத்திற்கான நாள் வரப்போகிறது. அதற்காகப் பலரும் கடந்த பல மாதங்களாகக் கடுமையாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவு நாளன்று 'விசில்' சின்னத்தில் நீங்கள் தட்டுகின்ற ஒவ்வொரு வாக்கும், வரும் மே மாதம் 4-ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) தமிழ்நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டமாக மாற வேண்டும். அன்று ஊரெங்கும் விசில் சத்தம் கேட்க வேண்டும்."

"இந்தத் தேர்தல் கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் ஒரு 'ஒரு விரல் புரட்சியாக' அமைய வேண்டும். மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக விஜய் தனது வேட்புமனுவில் தந்தைக்கும் தாய்க்கும் வழங்கிய தொகை குறித்துச் சில விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு ஏற்கனவே விளக்கமளித்திருந்த எஸ்.ஏ.சி, தற்போது தேர்தல் பிரசாரத்தின் கடைசி நேரத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பிரசாரம் முன்னெடுத்திருப்பது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக விஜய் மற்றும் எஸ்.ஏ.சி இடையே நீண்ட காலமாக இருந்ததாகக் கூறப்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, தற்போது குடும்பமாக இணைந்து களப்பணியாற்றுவது விஜய்யின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
