பைக் டாக்சி சேவைக்கு ஒழுங்குமுறை விதிகள் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு!

 
பைக் டாக்ஸி ரேபிடோ பைக் டாக்ஸி ரேபிடோ

தமிழகத்தில் மிக வேகமாக அதிகரித்து வரும் ஆன்லைன் பைக் டாக்ஸி சேவைகளை முறைப்படுத்தவும், அதற்கான பிரத்யேக ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நவீன்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், தமிழகத்தில் தற்போதைய நவீனச் சூழலில் தனியார் டிஜிட்டல் செயலிகள் மூலமாகச் செயல்படும் பைக் டாக்ஸி சேவைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பைக் டாக்ஸி ஓலா ரேபிடோ பாலியல்

ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் போன்ற பாரம்பரியப் போக்குவரத்துச் சேவைகள், பல்வேறு அரசு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே டிஜிட்டல் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கு இணையாக மாநிலம் முழுவதும் பரவலாக இயங்கி வரும் பைக் டாக்ஸி சேவைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது கண்காணிக்கவோ தமிழக அரசிடம் முறையான சட்ட விதிகளோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லை என்பதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி இந்தச் சேவைகள் தன்னிச்சையாகச் செயல்படுவதால், இதில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவற்றில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, ஆட்டோ மற்றும் வாடகை கார்களைப் போலவே, பைக் டாக்ஸி சேவைகளையும் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரேபிடோ

டிஜிட்டல் நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் இந்த இருசக்கர வாகனச் சேவைகளை ஒழுங்குபடுத்தத் தேவையான விதிகளை உடனடியாக வகுக்கத் தமிழக போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளதால், பைக் டாக்ஸி நிறுவனங்கள் மற்றும் அதன் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.