”கடன் கட்டவில்லை” வீடு முழுவதும் எழுதி அப்பாவியை அசிங்கப்படுத்திய தனியார் நிறுவனம்..!

 
வீட்டு கடன் கட்டவில்லை என வீட்டில் எழுதிய நிறுவனம்
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியும் ஆவணங்களை கொடுக்காமலும், வீட்டின் மீது கடன் கொடுக்கவில்லை என எழுதி இருப்பதாகவும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது கடன் பெற்றவர் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர் பிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் மீது தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  ரூ. 3 லட்சம் அடமானக் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்தி முடித்து விட்டு ஆவணங்களை தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளார் பிரபு.அப்போது பேசிய அலுவலர்கள், நீங்கள் இன்னும் ரூ1.5 லட்சம் வரை கடன் தொகை பாக்கி செலுத்த வேண்டி உள்ளதாகவும் அவற்றை செலுத்தி விட்டு ஆவணங்களை வாங்கி செல்லும் படியும் கூறியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பிய பிரபு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டின் சுவர்களில் வீட்டுக்கடன் செலுத்தவில்லை என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்த பிரபுவின் குடும்பத்தினரையும் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.இதனைக் கண்டு அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த பிரபு, வாங்கிய கடனுக்கு பணம் செலுத்திய பின்பும் தன்னையும், தனது குடும்பத்தினரையும் மிரட்டிய தனியார் நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கானாவிலக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் தனது வீட்டு ஆவணங்களை மீட்டுத்தர தேனி மாவட்ட காவல்துறையும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

From around the web