வருடத்திற்கொரு முறை அரிய நிகழ்வு... 200 வருட காலப் பெட்டகம்.. ஸ்ரீ சூடம்மாள் அம்மனை வணங்கும் சூரிய ஒளி!

 
தேனி ஓடைப்பட்டி மூர்த்திநாயக்கன்பட்டியில், அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் சூரிய ஒளி தேனி ஓடைப்பட்டி மூர்த்திநாயக்கன்பட்டியில், அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் சூரிய ஒளி

இன்று காலை தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியில், அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த சூரிய ஒளி வழிபாட்டு நிகழ்வு பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாத இறுதியில் (27, 28, 29 ஆகிய தேதிகள்) ஒரு அதிசய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (ஏப்ரல் 27), காலை சுமார் 6:45 மணி முதல் 6:52 மணி வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள் நேரடியாகக் கோயில் கருவறைக்குள் புகுந்து, அங்குள்ள அம்மன் சிலையின் மீது பட்டுப் பிரகாசித்தது. சூரிய பகவானே நேரில் வந்து அம்மனை வழிபடுவதாகக் கருதப்படும் இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த அபூர்வ நிகழ்வையொட்டி அதிகாலையிலேயே அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பால், விபூதி, இளநீர், தேன், நெய் உள்ளிட்ட 27 வகையான மங்கலப் பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட பெட்டகத்தில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சூரிய ஒளி வழிபாட்டிற்குப் பிறகு, திரண்டிருந்த பக்தர்களுக்கு அம்மனுக்குச் சூட்டப்பட்ட எலுமிச்சங்கனி மற்றும் மலர்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொங்கல், சுண்டல், புளியோதரை, பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. பக்தர்கள் தங்களது குடும்ப நலன் மற்றும் வேண்டுதல்களுக்காக நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.

அஃப்

இந்தச் சிறப்பான நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஜெயராம், நாராயணசாமி, ராமராஜ், திருப்பதி உள்ளிட்ட கோயில் கமிட்டியினரும், நகரி குல பங்காளிகளும் சிறப்பாகச் செய்திருந்தனர். இயற்கைக்கும் இறைவனுக்கும் இடையிலான இந்த அற்புதமான பிணைப்பைக் காட்டும் நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.