தலைமைச் செயலகத்தில் பரபரப்பு - அமைச்சர் ஆனந்த் அறை வாசலில் சிவப்புத் துணி!
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்தின் அலுவலக அறை வாசலில் சிவப்பு நிறத் துணி ஒன்று கட்டப்பட்டிருப்பது பெரும் கவனத்தையும், தலைமைச் செயலக வட்டாரத்தில் பரவலான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அமைச்சர் என். ஆனந்த் தீவிர இறை நம்பிக்கை கொண்டவர் என்பதால், எந்தவொரு முக்கியக் காரியத்தைத் தொடங்குவதற்கும் முன்பாகத் தனது இஷ்ட தெய்வமான மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.

இதனையடுத்தே, மேல்மலையனூர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து கொண்டுவரப்பட்ட அந்தச் புனிதத் துணி அவரது அறை வாசலில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபகாலமாகக் காவிரி நதிநீர்ப் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்னைகளில் எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களை நீர்வளத் துறை சந்தித்து வருகிறது. இத்துறை சார்ந்த நெருக்கடிகள், தடைகள் மற்றும் விமர்சனங்கள் நீங்கிப் பணிகள் சீராக நடைபெற வேண்டும் என்பதற்காகவே இந்த ஆன்மீக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
