ஒரே ஒரு எலுமிச்சை பழம் ரூ.45,500... சின்னமயில் முருகன் கோவிலில் பக்தர்கள் போட்டி - 9 பழங்கள் ரூ.1.43 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம்!

 
முருகன் எலுமிச்சைப்பழம் கோவில் ஏலம் முருகன் எலுமிச்சைப்பழம் கோவில் ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் 'சின்ன மயில்' மற்றும் 'இரட்டை குன்று முருகன்' என பக்தர்களால் போற்றப்படும் ஒட்டனந்தல் ரத்தினவேல் முருகன் கோவிலில், 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நிறைவடைந்தது. இத்திருவிழாவின் முக்கிய அம்சமான எலுமிச்சை பழ ஏலம் நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்தக் கோவிலில் திருவிழாவின் முதல் 9 நாட்களில், தினமும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் முருகனின் வேல் மீது வைத்துப் பூஜை செய்யப்படும்.

இந்த எலுமிச்சை பழத்தைச் சாப்பிட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கும், தீராத வியாதிகள் தீரும், வியாபாரம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் தீராத நம்பிக்கை. 11-ம் நாள் விழாவில் இடும்பன் சாமிக்குக் கருவாடு சோறு படையலிட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின், இந்த 9 எலுமிச்சை பழங்களும் ஏலம் விடப்படும்.

எலுமிச்சை பழங்கள்

மரச்செருப்பின் மீது நின்றபடி நாட்டாமை ஏலத்தைத் தொடங்கி வைத்தார். இதில் முதல் நாள் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை எடுக்கப் பெரும் போட்டியே நிலவியது. ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா-வெங்கடேசன் தம்பதியினர், கடும் போட்டிக்கு இடையே முதல் நாள் எலுமிச்சை பழத்தை ரூ.45,500-க்கு ஏலம் எடுத்தனர். அடுத்தடுத்த நாட்களில் பூஜை செய்யப்பட்ட பழங்களும் ஆயிரக்கணக்கில் ஏலம் போயின. ஒட்டுமொத்தமாக 9 எலுமிச்சை பழங்களும் சேர்ந்து ரூ.1,43,000-க்கு ஏலம் போயுள்ளது.

பழனி முருகன் முருகர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வினோத ஏலத்தைக் காணவும், அதில் பங்கேற்கவும் திரண்டிருந்தனர். ஏலம் எடுத்த தம்பதியினர், கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் சென்றனர்.

முதல் நாள் பழம்: ரூ.45,500, 2-ம் நாள் பழம்: ரூ.15,000, 3-ம் நாள் பழம்: ரூ.16,000. குறைந்தபட்ச ஏலம்: ரூ.5,000 (8-ம் நாள் பழம்). மொத்த வசூல்: ரூ.1,43,000.