இன்று சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... தேவாவின் மறைவுக்கு திரையுலகமே கண்ணீர்!

 
தேவா

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் 'கானா மன்னன்' என்று அழைக்கப்படும் 'தேனிசைத் தென்றல்' தேவா (75) காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.

நேற்று காலை திடீரென நெஞ்சுவலி மற்றும் படபடப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேவா உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். 1986-இல் 'மனசுக்கேத்த மகராஜா' படத்தின் மூலம் அறிமுகமாகி, 1990-களில் 'வைகாசி பொறந்தாச்சு' படம் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துத் தனி முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவா

இதுகுறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், "எங்களது தந்தையின் மறைவு குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

தேவா

இதற்கிடையே, இசை உலகிற்கு அவர் ஆற்றிய பெருமைமிக்க சேவையைப் போற்றும் வகையில் முழுமையான அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் இன்று மாலை 4 மணியளவில் தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.