செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் திடீர் திருப்பம்... உயிர்கள் வாழ்ந்ததற்கான உறுதியான ஆதாரம்?! கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்தது நாசா!
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்ற பல தசாப்த கால கேள்விக்கு விடை தேடும் முயற்சியில், நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளம் பகுதியில் உள்ள பாறைகளில் கியூரியாசிட்டி ரோவர் துளையிட்டு ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இதுவரை கண்டறியப்படாத 7 சிக்கலான கரிம மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரிம மூலக்கூறுகளுடன் இணைந்து உயிரினங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் மற்றும் கந்தகச் சேர்மங்களும் அந்தப் பாறைகளில் இருப்பது வேதியியல் சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கரிம மூலக்கூறுகள் மற்றும் நைட்ரஜன் ஆகியவை டி.என்.ஏ (DNA) மற்றும் புரதங்கள் உருவாவதற்கு மிக அவசியமானவை. இவை செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்டிருப்பது, அங்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கு உகந்த ஈரப்பதமான சூழல் இருந்ததை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

2012-ல் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் செவ்வாயில் வெற்றிகரமாக இயங்கி வருவது விண்வெளி வரலாற்றில் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கரிம மூலக்கூறுகள் உயிரியல் ரீதியாக உருவானவையா (அதாவது உயிரினங்கள் மூலம் வந்தவையா) அல்லது புவியியல் மாற்றங்கள் மூலம் உருவானவையா என்பதை அறிய நாசா விஞ்ஞானிகள் அடுத்தகட்ட ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
