திடீர் திருப்பம்.. .ஈரானின் உச்ச தலைவர் காமேனியைச் சந்திக்க ட்ரம்ப் விருப்பம்!

 
ஈரான் உச்சத்தலைவர் காமேனி ஈரான் உச்சத்தலைவர் காமேனி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனியை நேரில் சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல போட்காஸ்ட் நேர்காணல் ஒன்றில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான தற்போதைய ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

"ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தற்பொழுது அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் முற்றிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளார். ஈரான் மக்கள் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் மத்தியில் அவர் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது" என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்

"அணுசக்தி ஒப்பந்த விவகாரங்கள் மற்றும் வளைகுடாப் பகுதிப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, வரும் நாட்களில் மொஜ்தபா காமேனியை நான் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது. இந்தச் சந்திப்பு இரு நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு மிகவும் சாதகமாக அமையும்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான போருக்கு முதன்மைக் காரணமாக அமெரிக்கா முன்வைத்த அணுசக்தி விவகாரத்தில், தற்பொழுது ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் அமெரிக்கா போர் ட்ரம்ப்

"ஈரான் நாடு இனிமேல் எவ்வித அணு ஆயுதங்களையும் தயாரிக்கவோ அல்லது வைத்திருக்கவோ போவதில்லை என்ற மிக முக்கிய நிபந்தனைக்கு தற்போதைய பேச்சுவார்த்தையின் போது ஈரானியத் தரப்பு முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது சர்வதேசப் பாதுகாப்பிற்குப் பிரம்மாண்ட வெற்றியாகும். இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சில தன்னிச்சையான போர் நடவடிக்கைகள் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குச் சற்று முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன" என்றும் ட்ரம்ப் தனது நேர்காணலில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.