கோர விபத்து... 3 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட பைக்... காரின் அடியில் சிக்கிய சிறுவன்!

 
விபத்து

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் காரின் முன்பகுதியில் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்தவர் கோபி (39). பெயிண்ட் கடை ஒன்றை நடத்தி வரும் கோபி, நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், தனது குடும்பத்தினருடன் காரில் சங்குத்துறை கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்களது கார் பெம்பொன்கரை அருகே சென்ற போது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனமும், அதில் வந்த சிறுவனும் காரின் முன்பகுதியில் சிக்கியுள்ளனர். ஆனால் கோபி, காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார்.

அஜாஸ் (15) என்ற 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

காரின் முன்பகுதியில் பைக்கும், சிறுவனும் சிக்கியிருப்பதை கண்ட அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டும், கோபி தொடர்ந்து சங்குத்துறை கடற்கரை நோக்கி காரை இயக்கியுள்ளார். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை இவ்வாறு கார் பயணித்துள்ளது.

சங்குத்துறை கடற்கரைக்கு சென்ற போது, காரின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்ததால் கோபியும் அவரது குடும்பத்தினரும் காரை நிறுத்துவிட்டு கீழிறங்கி ஓடியுள்ளனர். சற்று நேரத்தில் சிறுவனுடன் கார் மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.

விபத்து குறித்து போலீஸார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் சிறுவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கில் பயணித்தது, சூரங்குடி பள்ளித்தெருவைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் (15) என்பது தெரியவந்தது. அஜாஸ், சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இதையடுத்து, அஜாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனம் தனது காரில் சிக்கியது தெரியாமல் கோபி காரை இயக்கினாரா? அல்லது விபத்து ஏற்படுத்திய அச்சத்தில் காரை நிறுத்தாமல் ஓட்டி வந்தாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web