பாலகிருஷ்ணன் மரணத்தில் திருப்பம்... 5 இடங்களில் காயங்கள்... நீதிகேட்டு போலீஸ் வாகனத்தின் அடியில் படுத்துப் போராடிய மகன்!

 
பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் லாக் அப் டெத்

தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் நடத்திய போராட்டம் மதுரை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், ஏலக்காய் மூட்டைகளை மதுரைக்கு லாரியில் ஏற்றி வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையம் லாக்-அப் டெத்

இந்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்காகப் பாலகிருஷ்ணனைச் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி அதிகாலை காவல் நிலையக் கழிவறையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலகிருஷ்ணனின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அவரது உடலில் 5 இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இது அவரது மரணத்தில் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து, பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கோரி அவரது தாயார், மகன், மாமியார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் லாக் அப்

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர்.

அப்போது காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலகிருஷ்ணனின் மகன், திடீரெனப் போலீஸ் வாகனத்தின் அடியில் சென்று படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உஷாரான போலீசார், அவரை மிகவும் சிரமப்பட்டு வாகனத்தின் அடியில் இருந்து வெளியே இழுத்து வந்து கைது செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மதுரை பி.பி.குளம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஓட்டுநர் மரண வழக்கில் நீதி கோரி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.