மின்கம்பத்தில் ஏறிய கரடி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - வைரலாகும் வீடியோ!

 
கரடி

அமெரிக்காவில் 22 அடி உயர மின்கம்பத்தின் உச்சிக்கு ஏறிய கரடி ஒன்று, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணம், யூனியன் கவுண்டி நகருக்கு உட்பட்ட கிலாட்ஸ்டோன் வனப்பகுதி சாலையோரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, அங்கிருந்த 22 அடி உயர மின்சாரக் கம்பத்தின் உச்சிக்கு ஏறியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் கரடியின் உடல் பாகங்கள் உரசியதில், அதன் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது.

மின்கம்பத்தின் உச்சியில் ஆபத்தான நிலையில் கரடி அமர்ந்திருப்பதைப் பார்த்த வாகன ஓட்டிகள், உடனடியாகக் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கரடியை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், பலத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான கரடி மின்கம்பத்தின் உச்சியிலேயே உயிரிழந்தது.

கரடி

இதையடுத்து, மின்கம்பத்தில் இருந்து கரடியின் உடலைப் பத்திரமாகக் கீழே இறக்கிய அதிகாரிகள், இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மின்கம்பத்தின் உச்சியில் கரடி இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.