கணவர் இறந்து 54 ஆண்டுகளாக நிவாரணம் கேட்டுப் போராடும் பெண்மணி.. கலெக்டரிடம் உருக்கமான மனு!

 
நிவாரணம் மனு

மின்சாரம் பாய்ந்து பலியான தனது கணவரின் இறப்பிற்கு உரிய நிவாரணமும் ஓய்வூதியமும் கோரி, 80 வயதைக் கடந்த மூதாட்டி உச்சிமகாளி என்பவர் கடந்த 54 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ந்து அலைந்து போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 2-ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசியக் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவரோடு சேர்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.

கணவரை இழந்து தவித்த உச்சிமகாளி, தன் கணவரின் பணிக்கால இறப்பிற்கு உரிய நஷ்டஈடு மற்றும் நிவாரணம் கேட்டு அன்று முதல் இன்று வரை 54 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் மனு அளித்த உச்சிமகாளி, "54 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் எந்தப் பலனும் இல்லை. கடும் மன உளைச்சலுக்கும் வறுமைக்கும் ஆளாகியுள்ள எனக்கு, கணவர் உயிரிழந்ததற்கான உரிய நஷ்ட ஈட்டையும் ஓய்வூதியத்தையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.