கிரிக்கெட் பிட்ச்சில் டிராக்டர் கொண்டு உழுத இளைஞர்.... 'தலைவரை' கூப்பிடாத கடுப்பில் செய்த விபரீதம்!

 
டிராக்டர் பிட்ச் கிரிக்கெட் டிராக்டர் பிட்ச் கிரிக்கெட்

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் விளையாட்டு உணர்வைச் சீர்குலைக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஏற்பட்ட அரசியல் மோதலால், ஆடுகளமே போர்க்களமாக மாறியுள்ளது.

ஜல்கான் மாவட்டத்தில் பிரபலமான உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியின் தொடக்க விழாவிற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரை விழாக்குழுவினர் அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தலைவரின் தீவிர ஆதரவாளர் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் மைதானத்திற்குள் டிராக்டருடன் புகுந்தார்.

டிராக்டர் பிட்ச் கிரிக்கெட்

போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே ஆவேசமாக வந்த அந்த நபர், வீரர்கள் மற்றும் நடுவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, டிராக்டர் மூலம் கிரிக்கெட் பிட்ச்சை அப்படியே உழுது தள்ளினார். இதனால் ஆடுகளம் நிலைகுலைந்து, விளையாடத் தகுதியற்றதாக மாறியது. இதன் காரணமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

டிராக்டர் பிட்ச் கிரிக்கெட்

மைதானத்தை டிராக்டர் கொண்டு உழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. "விளையாட்டில் எதற்கு அரசியல்?" என கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஆடுகளத்தைச் சேதப்படுத்திய அந்த நபரை உடனடியாகக் கைது செய்து, அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விளையாட்டு மைதானத்தை விவசாய நிலமாக மாற்றிய இந்த 'விபரீத அரசியல்' செயல், ஜல்கான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.