போதையில் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்... பொதுமக்கள் தர்ம அடி!
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில், தாயாருடன் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் பயணியிடம் மதுபோதையில் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞருக்குப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பேருந்து நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண் பயணியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணும் அவரது தாயாரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், மதுபோதையில் அத்துமீறிய அந்த நபரை மடக்கிப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கித் தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த ஓமலூர் காவல்துறையினர், பொதுமக்களின் பிடியிலிருந்த அந்த இளைஞரை மீட்டுக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபரை போலீசார் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
