உயிர் பிரியும் தருவாயில் காதலியைத் திருமணம் செய்துக் கொண்ட இளைஞர்.. கைதியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஈரான்!
ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரான அலிரேசா சபாவி என்பவருக்கும், பெண் செயற்பாட்டாளரான மஹ்வாஷ் கேஷ்வானி என்பவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு சிறை வளாகத்திலேயே தொலைபேசி வாயிலாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வாழ்வின் இறுதி விளிம்பில் நடைபெற்ற இந்தத் துயரமான நிகழ்வு உலக அளவில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரானைச் சேர்ந்த 25 வயது இளைஞரான அலிரேசா சபாவி மற்றும் 22 வயதான மஹ்வாஷ் கேஷ்வானி ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் அலிரேசா சபாவிக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதற்கான தண்டனை நிறைவேற்றப்படும் நாளும் நெருங்கியிருந்தது.
மறுபுறம், பெண் செயற்பாட்டாளரான மஹ்வாஷ் கேஷ்வானி வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை பெற்று வேறொரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரே சிறையில் கூட இருக்க முடியாத நிலையில், இருவரும் நீண்ட காலமாகத் தங்களது காதலை மனதளவில் சுமந்து வந்தனர்.
தமக்குச் சில மணி நேரங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதை அறிந்த அலிரேசா சபாவி, தனது காதலியான மஹ்வாஷ் கேஷ்வானியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தனது இறுதி விருப்பத்தைச் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். கைதியின் இந்தக் கோரிக்கையை மனிதநேய அடிப்படையில் பரிசீலித்த சிறை நிர்வாகம், அதற்கான அனுமதியை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு மட்டுமே முன்னதாகச் சிறையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருவரின் தந்தைகளும் தொலைபேசி வாயிலாக இணைக்கப்பட, சட்டப்பூர்வ வழக்கறிஞர்களும் உடனிருந்து அவசரத் திருமணத்திற்கான சட்ட நடைமுறைகளை நடத்தி வைத்தனர்.
வெறும் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தத் தொலைபேசித் திருமணத்தின் மூலம், சாகும் தருவாயில் இருந்த அலிரேசா சபவியின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டது. மரணத்தின் நிழலில் நின்றுகொண்டு காதலை வெளிப்படுத்திய இந்த இணை குறித்த செய்தி தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், மனித மனங்களின் ஆழமான பந்தத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
