வேறொருவரின் மனைவியைக் காதலித்து அழைத்துச் சென்ற இளைஞருக்கு அடி, உதை... சென்னையில் பரபரப்பு!

 
அடி உதை கள்ளக்காதல்

சென்னை புறநகர்ப் பகுதியில் திருமணமான பெண்ணைக் காதலித்து வேறு மாநிலத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞரை, ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்கியதில் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுப் பல்லாவரத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவருக்கும், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணான பவானி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுக் காதலாக மாறியுள்ளது. இந்தத் தகாத உறவு விவகாரத்தில், இருவரும் கடந்த தீபாவளியன்று தங்களது வீடுகளை விட்டு வெளியேறித் தலைமறைவாகினர்.

மனைவி மாயமானது குறித்துப் பவானியின் கணவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் சிக்னல் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். தேடுதல் வேட்டையின் முடிவில், டேவிட் மற்றும் பவானி ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து மீட்கப்பட்டுச் சென்னை பல்லாவரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பல்லாவரத்திற்கு அழைத்து வரப்பட்ட நேரத்தில், அங்குத் திரண்டு வந்த ஒரு கும்பல் டேவிட்டைச் சுற்றி வளைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற பவானியும் தாக்குதலில் சிக்கியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

கும்பல் தாக்கியதில் காயமடைந்த டேவிட் மற்றும் பவானி ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொது இடத்தில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்பது குறித்துப் பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.