நீட் போராட்டத்தில் கெத்து காட்டிய இளம்பெண்... போலீஸ் வாகனத்தை மறித்த வீடியோ வைரல்!
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி மும்பையில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, இளம்பெண் ஒருவர் துணிச்சலாகக் காவல் வாகனத்தை மறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. டெல்லியில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டங்களின் எதிரொலியாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அதில் பங்கேற்ற மாணவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த இளம்பெண் ஒருவர், கைது செய்யப்பட்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்திற்கு முன்பாகத் தைரியமாக நின்று வாகனத்தை நகராமல் தடுத்து நிறுத்தினார்.

இளம்பெண்ணின் இந்த எதிர்பாராத போராட்டத்தாலும், அதைத் தொடர்ந்து அங்கு கூடிய மற்ற மாணவர்களின் முழக்கங்களாலும் அந்த இடத்திலேயே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இளம்பெண்ணின் இந்தத் தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் அடைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். காவல் வாகனத்தை ஒற்றைப் பெண்ணாகத் தைரியமாக மறித்த இந்த ஆக்ரோஷமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.
