தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு... சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினர்...!

 
aadav aadav

 

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி ஜான் பிரிட்டோ மீதான வழக்கை அமலாக்கத்துறை தற்போது கையில் எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தங்கை லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் இந்த வழக்கில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் டெய்சி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மனைவி என்பதால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2024 மார்ச் 5-ம் தேதி இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்திய சோதனையில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்புள்ள 99 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ தான் 15 நாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்தும் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டது தெரியவந்தது. அவர் சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை தனது உறவினர்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ் மார்ட்டின், டெய்சி ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரின் பாஸ்போர்ட்டுகளை முடக்கி உத்தரவிட்டுள்ளது. தற்போது லீமா ரோஸ் மற்றும் டெய்சி ஆகியோர் முன்ஜாமீனில் உள்ள நிலையில், தங்களது பாஸ்போர்ட்டை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சமீபத்திய தேர்தலில் லீமா ரோஸ் லால்குடி தொகுதியிலும், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியிலும் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த வழக்கு தற்பொழுது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.