ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் வென்ற தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து!

 
செஸ் சவிதா ஸ்ரீ செஸ் சவிதா ஸ்ரீ

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசியத் தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பாகக் களம் இறங்கித் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்குத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மங்கோலிய நாட்டின் தலைநகரான உலான்படோர் நகரில், '21-வது ஆசியத் தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்' தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. சர்வதேச அளவிலான பல்வேறு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இந்த அக்னிப் பரீட்சையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் இந்திய அணியின் சார்பில் பங்கேற்றார்.

ஆரம்பம் முதலே தனது அபாரமான மற்றும் சாதுரியமான காய் நகர்த்தல்களால் எதிரணிகளைத் திணறடித்த சவிதா ஸ்ரீ, இறுதிப் போட்டியிலும் முதலிடத்தைப் பிடித்து, நாட்டிற்காகத் 'தங்கப் பதக்கம்' வென்று சாதனை படைத்துள்ளார்.

செஸ்  சவிதா ஸ்ரீ

சர்வதேச செஸ் அரங்கில் தங்கப் பதக்கம் வென்று தமிழக மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது வாழ்த்துப் பதிவில், "ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நமது தமிழ்நாட்டின் மகள் சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! ஒட்டுமொத்த இந்திய நாட்டின் அடையாளமாகவும், நம் தமிழ்நாட்டின் பெருமையாகவும் திகழும் தமிழ்நாட்டு இளைஞர்கள், உலக அரங்கில் இது போன்ற இன்னும் பல அரிய உலக சாதனைகளைப் புரிந்து சரித்திரம் படைக்கத் தமிழ்நாடு அரசு எப்போதும் அவர்களுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருக்கும்."

சமீபத்தில் மேயர் பிரியா போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தவெக அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்து வந்த சூழலில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சர்வதேச அளவில் சாதனை படைத்த தமிழக வீராங்கனையை வாழ்த்தி, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்கும் எனப் பேசியுள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் தங்கம் வென்ற சவிதா ஸ்ரீக்குத் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.