தொடர்ந்து விதிகளை மீறும் ஆதவ் அர்ஜுனா - குழந்தைகளை வைத்துப் பிரச்சாரம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவிற்கு இன்னும் 72 மணி நேரமே உள்ள நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
வில்லிவாக்கம் தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் ஆதவ் அர்ஜுனா, இன்று அயனாவரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தேர்தல் ஆணையத்தின் தடையையும் மீறி, சிறு குழந்தைகளை நடனமாட வைத்தும், அவர்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியும் வாக்கு சேகரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்கள் நிலுவையில் உள்ளன. "ஒருமுறை தவறு செய்வது எதார்த்தம், ஆனால் மீண்டும் அதே தவற்றைச் செய்வது திட்டமிட்ட விதிமுறை மீறல்" என சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது எனத் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் தவெக வேட்பாளர் தொடர்ந்து செயல்படுவது மற்ற வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் பரபரப்பில் இருக்கும் மற்ற கட்சிகள், தவெக-வின் இத்தகைய செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
