ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி அறிவிப்பு... 14 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அவரது மனைவி டெய்சி மார்ட்டினும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக டெய்சி அறிவித்துள்ளார். 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் பிரபல தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் - லீமா ரோஸ் தம்பதியின் மகள் டெய்சி மார்ட்டினை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 14 ஆண்டுகளாக அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை இணைந்து கடந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தம்பதிகளாகப் பிரிந்து தனித்தனிப் பாதைகளில் பயணிக்க இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் நலனே முதன்மை
இந்த முடிவு எடுத்திருந்தாலும், குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், அதன் மகிழ்ச்சி மற்றும் நலனை உறுதி செய்வதிலும் தங்களது பொறுப்பு தொடர்ந்து நீடிக்கும் என டெய்சி தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா மீது எப்போதும் மரியாதை உண்டு என்றும், அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி கிடைக்க வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
தங்களது தனிப்பட்ட முடிவையும், சூழலையும் புரிந்துகொண்டு தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இதற்கிடையே, இருவருக்கும் இடையிலான பிரிவு தொடர்பாக சட்டரீதியான விவாகரத்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவோ, நிறைவடைந்ததாகவோ அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
