ஆதவ் அர்ஜுனா தடுத்து நிறுத்தம்... விஜய் காருக்கு மட்டும் அனுமதி - 24 மணிநேரத்தில் ஆளுநருடன் விஜய் 2-வது சந்திப்பு!
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட இன்னும் 5 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார். ஆனால், அங்கு நடந்த சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் காருக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அவரைப் பின்தொடர்ந்து வந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநரைச் சந்திக்க வந்த விஜய், தற்போது ஆளுநர் மாளிகையில் உள்ள 'மக்கள் பவன்' விருந்தினர் அறையில் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக அவர் ஆளுநரைச் சந்திக்க முயல்வது, ஆட்சி அமைப்பதில் உள்ள தீவிரத்தைக் காட்டுகிறது. இருப்பினும், ஆளுநர் தரப்பில் இருந்து இன்னும் சந்திப்பிற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தவெக (108) மற்றும் காங்கிரஸ் (5) என மொத்தம் 113 இடங்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக விஜய் தரப்பு கூறுகிறது. "முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் அளித்த அவகாசத்திற்குள் பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் நிரூபிக்கிறோம்" என்பதை ஆளுநரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், ஒரு நிலையான அரசை உறுதி செய்யாமல் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநர் சில சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகத் தெரிகிறது. இதனாலேயே விஜய்க்கு அழைப்பு விடுப்பதில் தாமதம் நீடிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
