சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை தொடங்கியது... பக்தர்களுக்கு குடிநீர் எடுத்துவர அறிவுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா இன்று ஆகஸ்ட் 10 தொடங்கி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நான்கு நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான இன்று ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு 12,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆகஸ்ட் 11-ல் சிவராத்திரி வழிபாடும், ஆகஸ்ட் 12-ல் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடும் நடைபெறவுள்ளன.
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் மழை இல்லாத காரணத்தால் சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையில் 5 நிரந்தரக் குடிநீர் தொட்டிகளுடன், ஆடி அமாவாசையை முன்னிட்டு கூடுதலாக 5 தற்காலிகக் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அளவு குடிநீரை பக்தர்களே கையோடு எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோயில் நிர்வாகம் சார்பில் 1 லிட்டர் அளவு கொண்ட 1 லட்சம் குடிநீர் பாட்டில்கள் மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளன. மலையில் குளிக்க நீர் வசதி இருக்காது என்பதால், பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்திலேயே நீராடிவிட்டு மலையேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வசதிகள் நிறைந்த தாணிப்பாறை பாதையைப் பயன்படுத்த வேண்டும். ஒருவர் பின் ஒருவராகச் சென்று இறங்குபவர்களுக்கு வழிவிட்டு மலையேற வேண்டும். உடல் சோர்வு ஏற்பட்டால் ஓய்வெடுத்துப் பயணிக்க வேண்டும்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இதயம் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேறுவதைத் தவிர்க்க வேண்டும் என மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஆகஸ்ட் 10 முதல் 13 வரை 4 நாட்களும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி தலைமையில், டி.ஐ.ஜி அபிநவ் குமார் மற்றும் எஸ்.பி-க்கள் மேற்பார்வையில் 1,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களுக்காகத் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் சிறப்பு அன்னதான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
