சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது!
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேலணை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.
ஆன்மீகச் சிறப்புமிக்க இந்த ஆடி அமாவாசைத் திருவிழாவில் பங்கேற்பதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காரையாறு நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

திருவிழாவையொட்டித் தாமிரபரணி ஆற்றங்கரையில் பக்தர்கள் தாங்களாகவே தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, குடும்பத்துடன் தங்கி அய்யனாரை வழிபட ஆயத்தமாகி வருகின்றனர். விழா நாட்களை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன.
கோவில் பாதுகாக்கப்பட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்திருப்பதால், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
