ஆடி அமாவாசை... சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: நெல்லையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
நெல்லை மாவட்டம் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கோவில் அருகில் செயல்பட்டு வரும் 3 மதுபானக் கடைகளை 2 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய இரண்டு நாட்களுக்குக் கோவில் அருகிலுள்ள 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் முழுமையாக அடைக்கப்படும். பக்தர்களின் பாதுகாப்பு, வனப்பகுதியின் அமைதி மற்றும் திருவிழா காலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள் ஆகஸ்ட் 10 முதல் 13-ஆம் தேதி வரை அரசு சிறப்புப் பேருந்துகளில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலையும் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தும் வகையில், தனியார் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடை விதித்துள்ளது. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
