ஆடி அமாவாசை.. நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அருள்மிகு காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டுப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஆடி அமாவாசை திருவிழா நாளை விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வனப்பகுதியில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தங்கி வருகின்றனர். பக்தர்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாகச் சில கட்டுப்பாடுகளுடன் தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நெரிசலைக் கட்டுப்படுத்தவும் வனப்பகுதியைப் பாதுகாக்கவும் ஆகஸ்ட் 10 முதல் 13 வரை பக்தர்கள் கோவில் பகுதிக்குச் செல்ல அரசுப் பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அகஸ்தியர்பட்டியில் தற்காலிகப் பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அகஸ்தியர் அருவி மற்றும் வனச் சோதனைச் சாவடி பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அருள்மிகு சொரிமுத்து அய்யனாரைத் தரிசனம் செய்வதோடு, தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கள் முன்னோர்களுக்குத் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யவுள்ளனர்.
