திருத்தணியில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா.. 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

 
திருத்தணி தெப்பத் திருவிழா கிருத்திகை முருகன்

முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. மூலவருக்குத் தங்கக் கவசம் மற்றும் பச்சைக்கல் பதித்த வைர மாலை அணிவிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி, 'அரோகரா' முழக்கத்துடன் பால், பன்னீர், புஷ்ப, மலர் மற்றும் மயில் காவடிகளை எடுத்தும் அலகு குத்தியும் மலைக்கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 திருத்தணி முருகர்

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால், சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானைத் தரிசனம் செய்தனர். ஆடிக்கிருத்திகை விழாவின் சிகர நிகழ்வாக இன்றிரவு முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

காவடி மண்டபத்திலிருந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மாடவீதியில் வலம் வந்து, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிக் குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து நாளை 2-ம் நாள் தெப்ப உற்சவமும், நாளை மறுநாள் 3-ஆம் நாள் தெப்ப உற்சவமும் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, குடிநீர், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காகத் திருத்தணி நகரம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.