ஆடி மாத பொறந்சாச்சு... அம்மன் கோவில்கள் களைக்கட்டுது... சிறப்புக்கள்... பண்டிகைகள் என்னென்ன... ?

 
அம்மன் கோவில்

ஆடி மாசம் பொறந்தாச்சு...அம்மன் கோவில்கள் களைக்கட்ட துவங்கிடுச்சு. ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான். அம்மன் ஆலயங்களில் ஆடி மாதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் அனைத்து நாட்களுமே சிறப்பு தான் என்றாலும்  செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. 

பூமாதேவி இந்த பூலோகத்தில் அம்பிகையாக அவதரித்த மாதமே ஆடி மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க  வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 
பொதுவாக தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் பொழுதாக உள்ளது.  ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். அதில் ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. அதற்கேற்ப ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.  ஆடி மாத விரதங்கள் இருப்பவர்களுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் கிட்டும். அத்துடன் கல்வி, கேள்வி செல்வம், குழந்தைப்பேறு  என எண்ணிய யாவும் ஈடேறும்.  ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளை  செலுத்தும் நாளாக கருதப்படுகிறது

.இந்த நாளில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாட்டு மாதம். ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என பல சிறப்பு வாய்ந்த விரத மற்றும்  விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் அனுசரிக்கப்படுகின்றன

இன்று ஆடி மாசம் பொறந்துடுச்சு! ஆடி 1ம் தேதி ஏன் தேங்காய் சுட்டு கொண்டாடுகிறோம் தெரியுமா?

அதே நேரத்தில் ஆடி மாதத்தில்  நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து உண்டு. இதற்கான காரணம் ஆடி மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டிய மாதம். இதனால் மற்ற  விசேஷங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து  இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும். அதற்கு தடங்கலாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என சொல்லி வைத்தார்கள். 

ஆடி அமாவாசை: 

ஆடி அமாவாசை தினத்தில்  கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பு. அதே நேரம் வீடுகளிலும் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக தர்ம காரியங்களில் ஈடுபடலாம்.  இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை இவைகளை தானமாக வழங்கலாம். 

ஆடிப்பெருக்கு :

ஆடி மாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு அனுசரிக்கப்படுகிறது. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை பதினெட்டாம் பெருக்கு என்கிறோம். ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதன் பிறகே உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.  நெல்,கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தான்  தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை  கடவுளாக போற்றி மகிழ்ந்து, சிறப்பு பூஜைகள் செய்வர். அதன் பின்னரே உழவுக்கான பணிகள் தொடங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ‘ஆடிப்பெருக்கு’ தினத்தில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து கொள்வார்கள்.
 மேலும் ஆடிப்பெருக்கு தினத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் நதிக்கரைக்கு சென்று குளித்து  குறிப்பிட்ட இடத்தில் சுத்தம் செய்து வாழை இலையை படையல் இட்டு வழிபாடு நடத்துவர்.  இதில் அமோக விளைச்சலுக்காக வேண்டிக் கொள்வர். அத்துடன் வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகி நிலவளம் பெருகும். அதே போல் அவர்கள் வாழ்வும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. வீடுகளில் கலந்த சாதங்கள் செய்து நதிக்கரையில் உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்பார்கள். 

அழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழா!  பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
ஆடிப்பௌர்ணமி: 

ஆடிப்பௌர்ணமியில் சங்கர நாராயணராக ஹரியும், சிவனும் காட்சியளித்த தினம்.  தமிழகத்தில்  சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்கள் இருந்தனர். இவர்களுக்குள்  சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டது. ஆதிசக்தியிடம் விடைபெற  கைலாயம் சென்றனர்.  சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும் பதுமனுக்கும் உணர்த்தினார். பராசக்தியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து சிவபெருமான் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பௌர்ணமியன்று காட்சியளித்தார்

ஆடி கிருத்திகை :

ஆடிக்கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். இந்த தினத்தில் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து முருகனை வழிபடுவர். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல ஆலயங்களில் அன்று பூச்சொரிதல் நடைபெறும்.  ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.


 ஆடிப்பூரம்:

ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரமே ஆடிப்பூரம். கன்னிப் பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று  தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண உறவு கைகூடும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி ருதுவான நாளும் ஆடிப் பூரமே. அதனால் அம்பிகை ஆலயங்களிலும் ஆடிப்பூரத்திற்கு  சிறப்பான வழிபாடுகள் உண்டு.

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் ஆடிப்பூரம் அனுஷ்டிக்கப்படும். வீட்டில் மங்கலங்கள் நிலைத்திருக்கவும், தீர்க்க சுமங்கலி யோகம்  வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்து உபசரிக்க வேண்டும். கோவில்களில் திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். 
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளையும் அம்பிகையை மனதார துதித்து வாழ்வில் வளம் பெறுவோம்.  மனதை தெய்வ சிந்தனைகளில் செலுத்தி, மன சுத்தியுடன் பூஜைகளை செய்து அவள் அருள் பெறுவோம். 

ஓம் சக்தி ! பராசக்தி !

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web