ஆடிப்பெருக்கு... ஆக.3ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
ஆடிப் பெருக்கு விழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி திங்கள்கிழமை தருமபுரி மற்றும் சேலம் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் பணிநாளாகச் செயல்படும்.

அதே போன்று சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டும், ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட அறிவிப்பின்படி, அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையானது 'செலாவணி முறிச் சட்டம் 1881'-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. எனவே, இரு மாவட்டங்களிலும் உள்ள மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசின் அவசரப் பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளைக் கவனிக்கும் பொருட்டு அவசியமான குறிப்பிட்ட பணியாளர்களுடன் வழக்கம்போல் இயங்கும் என இரு மாவட்ட நிர்வாகங்களும் தெளிவுபடுத்தியுள்ளன.
