ராம்லீலா விழாவில் 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பு - ஆம் ஆத்மி காவல் நிலையத்தில் புகார்!
புதுடெல்லியில் நடைபெற்ற ராம்லீலா விழாவில் தீமையை அழிக்கும் அடையாளமாக 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பீதாம்புராவில் நடைபெற்ற ராம்லீலா விழாவில், தீமையின் மீது நன்மை வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் வழக்கமான ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உருவபொம்மைகளுடன், ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி சார்பில் 30 அடி உயரக் கரப்பான்பூச்சி உருவபொம்மையும் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி திட்டத்தின் கீழ், அசுத்தம் மற்றும் கழிவுகளின் அடையாளமாகக் கரப்பான்பூச்சி உருவகப்படுத்தப்பட்டு எரிக்கப்படுவதாக விழா அமைப்பாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாகவும் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளைப் பிரதிபலிக்கும் உருவபொம்மைகளை அவர்கள் எரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், டெல்லி காவல் நிலையத்திலும், துணை நிலை கவர்னர் தரண்ஜித் சிங் சந்துவிடமும் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். அந்த உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி தங்களது மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
