கோயில் திருப்பணிக்கு அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம்... தஞ்சாவூர் பெண் இணை ஆணையர் மற்றும் தோழி கைது!
தஞ்சாவூர் மாவட்ட மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராகப் பணியாற்றி வருபவர் ஜோதிலட்சுமி ஆவார். அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வன்மீகநாதர் கோயில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான மதியழகன் என்பவர் அனுமதி கோரியுள்ளார். இந்தத் திருப்பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளை வழங்குவதற்கும், டெண்டர் தவணைத் தொகையை விடுவிப்பதற்கும் இணை ஆணையர் ஜோதிலட்சுமி 1 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் மதியழகன், இது குறித்துத் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் முறைப்படி புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை துணை சூப்பிரண்டு அன்பழகன் தலைமையிலான போலீசார் ஆலோசனையின்படி, இரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஒப்பந்ததாரரிடம் கொடுத்து அனுப்பினர். ஜோதிலட்சுமியின் அலுவலகத்திற்குச் சென்ற மதியழகன், அங்கு இடைத்தரகராகச் செயல்பட்ட இணை ஆணையரின் தோழியான கிரிஜா என்பவரிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்துள்ளார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், கிரிஜாவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட இணை ஆணையர் ஜோதிலட்சுமியையும் அவரது தோழியையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கைதான அதிகாரியின் வீட்டில் போலீசார் தீவிரமான சோதனைகளை நடத்தி வருவதுடன், கடந்த காலங்களில் இதுபோன்ற முறைகேடுகளில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
