மலை கிராமத்திற்கு முதன்முறையாக வந்த அரசு பேருந்து மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!

 
குரங்கணி குரங்கணி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொட்டக்குடி மலை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே சாலை வசதி அமைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து வசதி எதுவும் இல்லாததால் பள்ளி குழந்தைகள் கல்வி கற்க தினமும் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குரங்கணி பேருந்தைப் பயன்படுத்தும் நிலை நீடித்து வந்தது.

தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு கடந்த 56 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், தேர்தல்களை புறக்கணித்தும் இதுவரை எந்தவொரு போக்குவரத்து சேவையும் அங்கு வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கொட்டக்குடி மலை கிராமத்திற்கு முதன்முறையாக புதிய அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 மணி அளவில் கொட்டக்குடி கிராமத்திற்குள் முதன்முறையாக நுழைந்த அந்த அரசு பேருந்தை கண்டதும் கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்களின் நீண்ட கால கனவு நனவானதை கொண்டாடும் வகையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி பேருந்திற்கு தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி எடுத்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களின் உற்சாக வரவேற்பை வெளிப்படுத்தினர்.