அதிர்ச்சி... ஆவின் பால் பாக்கெட்டில் ரசாயன நெடி: 160 ரோல்களை திருப்பி அனுப்பிய நிர்வாகம்!
மதுரை மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ஆவின் நீல நிறப் பால் பாக்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து பரவலான புகார்கள் எழுந்ததுடன் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டது பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாகச் சோதனைகளை மேற்கொண்டு மாதிரிகளைச் சேகரித்தனர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணை மற்றும் பல்வேறு மையங்களில் சோதனைகளை நடத்தினர். பால் பாக்கெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பிலிம் பேப்பர் ரோல்களில் ஏற்பட்ட குறைபாடே இந்த நெடிக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தரமற்ற பிலிம்களை சப்ளை செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

பண்ணையில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த ரசாயன நெடி கொண்ட 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஆவின் நிர்வாகம் உடனடியாகத் திருப்பி அனுப்பியது. தற்போது அந்தத் தரமற்ற பிலிம்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுத் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
