சென்னையில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு... இல்லத்தரசிகள் கடும் அவதி!

 
ஆவின் பால்

சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் முகவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாகப் பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் காலை நேரங்களில் கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முன்பு ஒரு கடைக்கு 32 பெட்டிகள் வரை ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 20 பெட்டிகளாகக் குறைந்துள்ளதாக முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆவின்

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில், வெளி சந்தையைக் காட்டிலும் குறைந்த விலை வழங்குவதால் விவசாயிகளிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாலைப் பலரும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதால் கொள்முதல் அளவு பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆவின்

குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் இதர சத்துகள் நிறைந்த பாலுக்குத் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை வழங்குவதும் இந்தத் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலரையும் நேரடியாகப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் ஆவின் நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தங்குதடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். பால் தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்காவிட்டால் பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரித்துள்ளனர்