பாட்டி இறந்த செய்தியை அபிஜீத் தீப்கேவிடம் கூறவில்லையா? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட டெல்லி போலீஸ்!
பாட்டி இறந்த தகவலை போலீசார் தன்னிடம் தெரிவிக்கவில்லை என அபிஜீத் தீப்கேவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டிய நிலையில், அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதற்கான வீடியோவை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டி இறந்த தகவல்: போலீஸ் வெளியிட்ட வீடியோ
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே உள்ளிட்டோர் டெல்லி போலீசாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் வசித்து வந்த தீப்கேவின் 85 வயது பாட்டி சாவித்ரிபாய் சங்கர்ராவ் திப்கே, உடல்நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் தீப்கே பங்கேற்கும் வகையில் அவரை விடுவிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாட்டி இறந்த செய்தியை போலீசார் தெரிவிக்கவில்லை என அவரது தாயார் குற்றம்சாட்டினார். இதனை மறுத்த போலீசார், தீப்கேவிடம் பெண் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் தகவலைத் தெரிவித்து இரங்கல் கூறும் வீடியோவை வெளியிட்டனர்.
போலீசாரின் விளக்கத்தை மறுத்த தீப்கே
பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக போலீசார் கூறியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், பாட்டியின் மரணம் குறித்து அறிந்ததும் தன்னுடன் வசித்து வந்த உறவினரைத் தொடர்புகொண்டு பேசுவதற்காக செல்போனைக் கேட்டபோது போலீசார் வழங்க மறுத்ததாக தீப்கே குற்றம்சாட்டியுள்ளார். இதனால், போலீசார் வெளியிட்ட வீடியோவும் தீப்கேவின் குற்றச்சாட்டுகளும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
