அம்...மாடியோவ்... அபுதாபியில் வெள்ளை வல்லூறு 3.85 கோடிக்கு ஏலம்... வைரலாகும் வீடியோ!
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச வேட்டையாடுதல் மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் அரிதான முற்றிலும் வெள்ளையான 'அல்ட்ரா ஒயிட் பியூர் கயர் கர்மூஷா' ரகத்தைச் சேர்ந்த இளம் வல்லூறு ஒன்று 1.5 மில்லியன் யு.ஏ.இ டிர்ஹாமிற்கு ஏலம் போயுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்க் மொக்லிச் ஃபால்கன் ஃபார்ம்' என்பவரால் வளர்க்கப்பட்ட இந்தப் பறவை, அதன் தூய்மையான வெள்ளை நிற இறகுகள் மற்றும் தனித்துவமான உடலமைப்பால் ஏலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கண்காட்சியின் போது 1 கிலோ எடையும், 16.5 அங்குல நீளமும் கொண்ட இந்த வல்லூறு, ஏலத்தின் ஐந்தாவது சுற்றில் சாதன விலைக்கு விற்பனையாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த ஏல நிகழ்வின் போது ஷேக்கா அல் மன்சூரி என்ற சிறுமி தனது மாமாவுடன் கலந்துகொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில், பறவைகள் மற்றும் வல்லூறுகள் மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பு குறித்து அந்தச் சிறுமி பேசுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே அவருடைய மாமா இந்த மதிப்பிலான அரிதான வெள்ளை வல்லூறை வாங்கிக் கொடுத்ததாகத் தகவல்கள் பரவின.
