இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி... மீண்டும் உயருகிறது ஏசி, குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி மற்றும் செல்போன்களின் விலை உயர்வு!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏசி, குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி மற்றும் செல்போன்களின் விலை இந்த மாத இறுதியில் மீண்டும் உயர உள்ளது. மெமரி சிப் மற்றும் கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த 4 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 3 முறை உயர்ந்துள்ள நிலையில், தற்போது 4-வது முறையாக விலை அதிகரிக்க இருப்பது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது இந்த விலை உயர்வுக்கு மற்றொரு காரணியாக பார்க்கப்படுகிறது. மேலும் சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளதாலும், ஏசி போன்ற மின்சாதனங்களுக்கான புதிய மின் சேமிப்பு விதிகள் அமலுக்கு வந்துள்ளதாலும் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஏற்கனவே விலையேற்றம் கண்ட நிலையில், தற்போது ஏப்ரல் மாத இறுதியில் மீண்டும் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட போது அதிகரித்த தேவையை இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தலாம் என்று வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே புதிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள், இந்த மாத இறுதிக்குள் வாங்குவது லாபகரமாக இருக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. வரும் நாட்களில் இந்த விலை ஏற்றம் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
