அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் சோகம்... லாரியும் ஜீப்பும் மோதி 9 பேர் பலி!

 
acc acc

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் அஸ்தி கரைப்பதற்காக உறவினர்கள் இருபத்தைந்து பேர் ஒரு ஜீப்பில் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் பயங்கர மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணம் செய்தவர்களில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த பதினைந்து பேர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.