லாரி சோதனைச் சாவடி தடுப்பில் மோதி காவலர் உட்பட 6 பேர் பரிதாப பலி!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் காவலர் மற்றும் பெண் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெள்ளக்கோவில் சோதனைச் சாவடி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மையத் தடுப்பில் மோதி நின்ற லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரனும், லாரி ஓட்டுநரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், நின்றுகொண்டிருந்த லாரி மற்றும் காவலர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த எதிர்பாராத மோதலில் காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 4 பேர் என மொத்தம் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காங்கேயம் காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த கோர விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், பணியில் இருந்த காவலர் பலியானது சக காவல்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. விபத்துக்கான சரியான காரணங்கள் மற்றும் காரில் வந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
