லாரி மீது கார் மோதி கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஈசநத்தம் பிரிவு சாலை பகுதியில் இன்று காலை ஒரு கொடூரமான சாலை விபத்து நேரிட்டது. மதுரையை அடுத்த உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (30) மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி (27) ஆகியோர் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்களுடன் 3 வயது சிறுமியும், கார் ஓட்டுநரும் அந்த காரில் கரூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இவர்களது கார் அரவக்குறிச்சி ஈசநத்தம் பிரிவு சாலை அருகே வந்தபோது, சாலையில் திடீரென ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. அந்த பைக் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் காரை திடீரென திருப்ப முயன்றார். அப்போது வேகம் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நின்று கொண்டிருந்த கனரக லாரியின் பின்பகுதியில் மிக பலத்த சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த அரவிந்த், ஜனனி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த 3 வயது சிறுமி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆகிய இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
