ஆம்னி பேருந்து மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி...குழந்தைகள் உட்பட 42 பயணிகள் படுகாயம்!
சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு ஏராளமான பயணிகளுடன் நேற்று ஒரு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த பேருந்து இன்று அதிகாலை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வண்டிநகரம் பகுதி நான்குவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆம்னி பேருந்து, எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடையில் இடித்து முழுமையாகச் சுக்குநூறானது. இந்த பலத்த மோதலின் காரணமாக அரசு பேருந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த பொதுமக்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 4 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட 42 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்துக் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிகாலையில் நடந்த இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
