'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் விபத்து.. இளைஞர் உயிரிழப்பு!
இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் 'ஜெயிலர் 2' படத்திற்கான பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு வீட்டைப் போன்ற கலை அலங்காரப் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, பணியில் இருந்த இளைஞர் ஒருவரை மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கிய விபத்தில் சிக்கிய 28 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலைத் துறையில் ஆர்வத்துடன் பணியாற்றி வந்த ஒரு இளம் தொழிலாளியின் இந்த அகால மரணம் படப்பிடிப்புத் தளத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தப் பணியின் போது பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்புத் தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் கிளப்பியுள்ளது.
