கோர விபத்து: லாரி மீது கார் மோதி தாய், மகன் துடிதுடித்துப் பலி! தந்தை படுகாயம்!

 
லாரி கார் மோதல் லாரி கார் மோதல்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கார் மற்றும் லாரி மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடகாவின் சிர்வார் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா நாயக் என்பவர், தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் கிருஷ்ணா நாயக்கின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கித் துடிதுடித்து உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கிருஷ்ணா நாயக் மற்றும் காரில் இருந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து நடந்த வேகத்தில் கார் மற்றும் லாரி ஆகிய இரண்டுமே தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

தரிசனம் முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய ஒரு குடும்பம், விபத்தில் சிக்கிச் சிதைந்து போனது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கார் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் நேரிட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.