கோர விபத்து! அரசுப் பேருந்து மீது லாரி மோதி ஓட்டுநர் பலி: 40 பயணிகள் படுகாயம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28) அதிகாலையில் அரசு சொகுசுப் பேருந்து மற்றும் லாரி மோதிக்கொண்ட கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அரசு சொகுசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை திண்டிவனம் அருகே உள்ள சாலவாதி என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி நோக்கி தர்பூசணி ஏற்றி வந்த லாரி ஒன்று, சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் தாக்கத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநரான சக்திவேல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாகச் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய ஆந்திர மாநிலப் பதிவு எண் கொண்ட லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் தேர்தல் முடிவுகளுக்காக மக்கள் காத்திருக்கும் இந்தச் சூழலில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
